அவனுக்காக போராடுகிறேன்: காதல் கணவனை ஆணவக்கொலைக்கு பலிகொடுத்த மனைவியின் கண்ணீர்

கேரளாவில் தனது காதல் கணவனை ஆணவக்கொலைக்கு பலி கொடுத்துவிட்டு கண்ணீர் மல்க தனது காதல் குறித்து விவரிக்கிறார் நீனு.

கெவின் கொலை

கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் நீனு. கொல்லம் பகுதியில் செல்வாக்கு மிக்க குடும்பமாக இவரது குடும்பம் இருந்து வந்துள்ளது. இவரும் கோட்டயம் பகுதியை சேர்ந்த கெவின் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

கெவின் தலித் கிறிஸ்துவ குடும்பத்தை சேர்ந்தவர். இவர்களது காதலுக்கு நீனு குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இருவரும் கடந்த மாதம் திருமணம் செய்துகொண்டனர். இதனையடுத்து நீனு குடும்பத்தினர் காவல்நிலையத்தை நாடினர். அங்கு அவர்கள் நீனுவை கட்டாயப்படுத்தி அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

கெவின் தனது உறவினர் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் அங்கு வந்த ஒரு கும்பல் கெவினையும் அவரது உறவினரான அனிஷையும் தாக்கிவிட்டு இருவரையும் கடத்தி சென்றுள்ளனர். மதியவேளையில் அனிஷை மட்டும் அந்தக்கும்பல் விடுவித்துள்ளனர். கெவின் குறித்து கேட்டதற்கு எங்கள் கட்டுப்பாட்டில் இருந்து அவன் தப்பிவிட்டான் என கூறியுள்ளனர்.மறுநாள் காலை தென்மலா காட்டுப்பகுதிக்கு அருகில் உள்ள கால்வாயில் கெவின் சடலமாக மீட்கப்பட்டார்.

கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

காதல் மலர்ந்தது எவ்வாறு?

நீனு 2016ஆம் ஆண்டு தனது கல்லூரி படிப்பை தொடங்கியுள்ளார். முதன்முதலில் ஒரு மெக்கானிக்காக தான் கெவின் அறிமுகமாகியுள்ளார்.

நீனு மற்றும் அவளது தோழி இருவரும் ஒன்றாக தான் கல்லூரிக்கு சென்றுவந்துள்ளனர். அனிதாவை பார்க்க அவளது நண்பர் பேருந்து நிலையம் வருவார். அவருடன் கெவினும் வந்துள்ளார். இப்படி தான் நீனுவுக்கும் கெவினுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளார். மொபைல் எண்களை பரிமாற்றிக்கொண்டுள்ளனர். ஆரம்பத்தில் குறுஞ்செய்தியில் ஆரம்பித்த இவர்களது பழக்கம் நாளடைவில் நீண்ட நேரம் போனில் உரையாடும் அளவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் தான் கெவின் தனது காதலை நீனுவிடம் தெரிவித்துள்ளார். அப்போதே நீனு தனது குடும்பத்தினர் குறித்து கெவினிடன் தெரிவித்துள்ளார்.

நீனுவின் தந்தை கத்தோலிக்க கிறிஸ்துவர் , தாய் இஸ்லாம் மதத்தை சார்ந்தவர் என்பதும் இதனால் அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் குறித்தும் கூறியுள்ளார். ஆனால் கெவின் வழக்கமாக எல்லா காதலர்களுக்கு வரும் பிரச்னை தான் நாம் திருமணம் செய்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

பேசும்போது குழந்தை பருவத்தை அடுத்து தான் காதல் வயப்பட்ட சமயம் தான் என் வாழ்வில் பசுமையான தருணங்கள் என்கிறார் நீனு . கெவின் என்னை பொன்னி என்றும் நான் அவனை இச்சா என்றும் செல்லமாக அழைப்பேன்.

நாங்களும் மற்ற காதலர்களை போன்று கோயில், தியேட்டர், மால் என எல்லா இடங்களுக்கும் சென்றோம். ஆனால் அப்போதும் எனது குடும்பத்தினர் குறித்து பயம் இருக்கும் என்றார்.கெவினுக்கு துபாயில் வேலை கிடைத்ததையடுத்து அங்கு சென்றுவிட்டார்.

மே மாதம் தான் நீனுவின் வாழ்க்கையில் புயல் வீச தொடங்கியது. நீனுவுக்கு வரன் தேட தொடங்கிய பெற்றோர்கள் அதற்காக அவரது விவரங்களை மேட்ரிமோனியில் பதிவிட்டுள்ளனர்.

இதனையடுத்து இருவரும் பதிவு திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தனர்.அதன்படி கடந்த மே மாதம் 24ஆம் தேதி கோட்டயத்தை அடுத்த எட்டமனூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

அன்று இரவு கெவினின் உறவினர் இல்லத்தில் இருவரும் தங்கியுள்ளனர். இரவு தூங்க செல்லும் முன்பு தனது தந்தைக்கு போன் செய்து திருமணம் குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.

ஆனால் கெவின் குடும்பத்தினருக்கு அவர் கடத்தப்படும் வரை இவர்களது காதல் திருமணம் விவகாரம் தெரியாது. கெவின் காணாமல் போன பின்பு தான் அனைத்து விவரங்களும் அவர்களுக்கு தெரியும் என நீனு கூறியுள்ளார்.

நான் எனது பெற்றோர்கள் குறித்து கவலையில் இருந்தேன். எதற்கு பயப்படாதே என கெவின் எனக்கு தைரியம் கூறீனார். மே 25ஆம் தேதி நான் விடுதிக்கு சென்றுவிட்டேன். கெவின் அவரது உறவினர் வீட்டில் இருந்தார், மே 26 இரவு இருவரும் நீண்ட நேரம் போனில் பேசினோம்.

அப்போது பொன்னி நீ எதுக்கும் கவலைப்படாதே. உன் பெற்றோர்கள் என்ன செய்வார்கள். என்னை முதலில் அடிப்பார்கள் ஆனால் பிறகு நம்மை ஏற்றுக்கொள்வார்கள். என்னை காலை 5.30 மணிக்கு எழுப்பி விடு என்று கூறினான்.

நான் காலை 5.45 மணிக்கு கால் செய்தேன். ஆனால் கெவின் போனை எடுக்கவில்லை. சில மணி நேரங்கள் கழித்து தான் கெவின் கடத்தப்பட்ட விவரம் எனக்கு தெரியவந்தது.

அதன்பின்னர் நாங்கள் காவல்நிலையம் சென்றோம். அங்கு தான் கெவினின் குடும்பத்தினர் முதன்முதலாக என்னை கண்டனர். கெவினுடன் கடத்தப்பட்ட அனிஷை மதியவேளையில் அந்தக்கும்பல் வீட்டில் விட்டு சென்றனர். அவர் என்னிடம் எனது உறவினரான நியாஸிடன் பேசச் சொன்னார்.

நான் போனில் அவரை தொடர்பு கொண்டு பேசினேன். நான் வீட்டிற்கு செல்கிறேன்.கெவினை எதுவும் செய்து விடாதீர்கள் அவரை விட்டுவிடுங்கள் என கெஞ்சினேன். ஆனால் அவர் பதில் எதும் பேசாமல் சிரித்துவிட்டு போனை கட் செய்துவிட்டார். நான் பயந்த மாதிரியே நடந்துவிட்டது என நீனு கூறினார்.

தன் காதல் கணவன் மரணத்துக்கு நீதிகிடைக்க வேண்டி போராடி வருகிறார் நீனு. கெவினின் பெற்றோரும் நீனுவை தங்கள் வீட்டு பெண்ணாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

Be the first to comment on "அவனுக்காக போராடுகிறேன்: காதல் கணவனை ஆணவக்கொலைக்கு பலிகொடுத்த மனைவியின் கண்ணீர்"

Leave a comment

Your email address will not be published.


*