தமிழீழம் அமைய விட மாட்டோம்- மகிந்த ராஜபக்சே அறிவிப்பு


தமிழீழமா, ஒற்றையாட்சி இலங்கையா? என்பதைத் தீர்மானிக்கும் தேர்தலாக உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இருக்க போகிறது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வரும் பிப்ரவரி மாதம் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்துள்ளன. உள்ளூராட்சி சபையில் போட்டியிடும் பொதுஜன பெரமுன கட்சியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் கடவத்தையில் நடைபெற்றது.

அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய மகிந்த ராஜபக்சே,

“நாட்டை பிரிப்பதற்கு நாம் எதிரானவர்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் ஒவ்வொருவரும் தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும். நல்லாட்சி அரசாங்கம் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவந்து தமிழீழம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எனவே உள்ளூராட்சி சபை தேர்தலில் அதற்கு இடமளிப்பதா, இல்லையா என்பத தீர்மானிக்க வேண்டும்.

தமிழீழம் அமைத்து நாட்டை இரண்டாகப் பிரிப்பதற்கு நாம் எதிரானவர்கள் என்பதை உறுதிப்படுத்த தாமரை மொட்டுச் சின்னத்தைக் கொண்ட சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்க வேண்டும்.

நாட்டில் தற்போது அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி காணப்படுகிறது. பொருளாதாரம் சீரழிந்துள்ளது. இவ்வாறான நிலையில் எதிர்க்கட்சியும் அதற்கெதிராக குரல் கொடுப்பதாக இல்லை. எனினும் எமது ஆட்சிக்காலத்தில் நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு சென்றோம்.

நாட்டில் முறையான ஆட்சியைக் காண முடியவில்லை. அமைச்சர்களுக்கு இடையில் குழப்பம். ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் பனிப்போர். எனவே அரசாங்கத்திடம் முறையான கொள்கைத் திட்டம் இல்லை” என்றார்.

முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சேவின் பேச்சு, இன முரண்பாட்டை உருவாக்கி அதில் வெற்றி பெற நினைக்கும் முயற்சியாக உள்ளது என்று பார்க்கப்படுகின்றது.

Be the first to comment on "தமிழீழம் அமைய விட மாட்டோம்- மகிந்த ராஜபக்சே அறிவிப்பு"

Leave a comment

Your email address will not be published.


*